| | 2672 | கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
 பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
 நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
 பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
 ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
 ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
 சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
 ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
 ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
 ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
 கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
 தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
 ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
 வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
 ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
 ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
 கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
 வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
 ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
 சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
 நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
 பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
 சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
 ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
 ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
 வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
 கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
 ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
 தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
 ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
 சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
 தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
 நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
 தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
 வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
 ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
 பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
 ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
 கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
 சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
 வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
 பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
 கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
 சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
 தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
 நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
 ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
 கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
 ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
 ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
 ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
 ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
 ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
 ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
 சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
 வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
 ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
 சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
 வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
 நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
 போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
 ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
 தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
 ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
 மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
 ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
 வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
 ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
 நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
 ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
 தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
 ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
 நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
 ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
 வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
 சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு   (16)
 நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
 கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
 ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம்   (17)
 சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
 வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
 ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து   (18)
 சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
 போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
 கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை   (19)
 சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
 சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
 ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும்   (20)
 பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
 தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
 நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
 ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
 கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
 பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த்   (21)
 தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
 போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
 நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
 நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
 வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு   (22)
 தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
 ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
 பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
 தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று   (23)
 ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
 போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
 தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
 ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக்   (24)
 கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
 பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும்   (25)
 ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
 சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்   (26)
 ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
 வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
 வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன்   (27)
 சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
 தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
 ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
 ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
 போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
 கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
 வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்   (28)
 ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு   (29)
 ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
 நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள்   (30)
 ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
 பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்   (31)
 கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
 ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
 ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
 வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
 ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்   (32)
 பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
 தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
 ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு   (33)
 ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
 கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
 சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
 லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
 பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
 பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
 ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை   (34)
 கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
 சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
 கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
 ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
 சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்   (35)
 பாரோர் புகழும் வதரி வடமதுரை
 ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
 ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
 சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
 தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர்   (36)
 பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே   (37)
 ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
 வார் ஆர் பூம் பெண்ணை மடல்   (38)
 | 
 |  |