நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

அடியவர்க்கு எளியவன்
2804பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே   (1)
   
2805எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே   (2)
   
2806அமைவு உடை அறநெறி முழுவதும்
உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே?       (3)
   
2807யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
      அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
      எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
      உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
      இலது இல்லை பிணக்கே   (4)
   
2808பிணக்கு அற அறு வகைச் சமயமும்
      நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
      ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
      புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
      உணர்வுகொண்டு உணர்ந்தே     (5)
   
2809உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
      வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
      உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
      அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
      மனப்பட்டது ஒன்றே   (6)
   
2810ஒன்று எனப் பல என அறிவு அரும்
      வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
      அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
      இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
      நம்முடை நாளே   (7)
   
2811நாளும் நின்று அடு நம பழமை அம்
      கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
      மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
      நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
      மாள்வது வலமே   (8)
   
2812வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
      இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
      உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
      அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
      இவை அவன் துயக்கே   (9)
   
2813துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
      அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
      பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
      கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
      வணங்குவன் அமர்ந்தே   (10)
   
2814அமரர்கள் தொழுது எழ அலை கடல்
      கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
      சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
      இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
      பிறவி அம் சிறையே   (11)