நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைமகள் தூதுவிடல்
2815அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ?   (1)
   
2816என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே     (2)
   
2817விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே     (3)
   
2818என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ?   (4)
   
2819நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே   (5)
   
2820அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே?     (6)
   
2821என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?   (7)
   
2822நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே   (8)
   
2823நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே   (9)
   
2824உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே   (10)
   
2825அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே     (11)