நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்
2826வள ஏழ் உலகின் முதலாய
      வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட
      கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்
      வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய
      எந்தாய் என்பன் நினைந்து நைந்தே     (1)
   
2827நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
      இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
      புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
      வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
      மாசூணாதோ? மாயோனே   (2)
   
2828மா யோனிகளாய் நடை கற்ற
      வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
      நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
      திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
      தாயோன் தான் ஓர் உருவனே            (3)
   
2829தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
      தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
      மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
      தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
      வைகுந்தன் எம் பெருமானே   (4)
   
2830மான் ஏய் நோக்கி மடவாளை
      மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
      நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
      மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
      சேருமாறு வினையேனே   (5)
   
2831வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
      விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
      மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
      ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
      என்று நைவன் அடியேனே     (6)
   
2832அடியேன் சிறிய ஞானத்தன்
      அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
      புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
      இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?   (7)
   
2833உண்டாய் உலகு ஏழ் முன்னமே
      உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
      உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
      மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
      நெய் ஊண் மருந்தோ? மாயோனே   (8)
   
2834மாயோம் தீய அலவலைப்
      பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
      அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
      மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
      அம்மா மூர்த்தியைச் சார்ந்தே     (9)
   
2835சார்ந்த இரு வல் வினைகளும்
      சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
      திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
      அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
      இவற்றின் உயிராம் நெடுமாலே   (10)
   
2836மாலே மாயப் பெருமானே
      மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
      மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
      வல்லார்க்கு இல்லை பரிவதே   (11)