நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆராதிப்பார்க்கு மிக இனியன்
2848பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே   (1)
   
2849வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   (2)
   
2850ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     (3)
   
2851மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   (4)
   
2852விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே?     (5)
   
2853பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   (6)
   
2854யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   (7)
   
2855என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே       (8)
   
2856அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     (9)
   
2857அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே     (10)
   
2858குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     (11)