நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்
2859ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே       (1)
   
2860அம்மானாய்ப் பின்னும்
எம் மாண்பும் ஆனான்
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே   (2)
   
2861கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே   (3)
   
2862வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே   (4)
   
2863வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே       (5)
   
2864கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே     (6)
   
2865கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே     (7)
   
2866ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே     (8)
   
2867சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே     (9)
   
2868நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே       (10)
   
2869நீர்புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே       (11)