நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

பிரிவாற்றாமைக்கு வருந்தல்
2892வாயும் திரை உகளும் கானல் மட நாராய்
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே?   (1)
   
2893கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?   (2)
   
2894காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே   (3)
   
2895கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே?     (4)
   
2896ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)
   
2897நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள்
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே?   (6)
   
2898தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே   (7)
   
2899இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே?   (8)
   
2900நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே?     (9)
   
2901வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே     (10)
   
2902சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே   (11)