நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்
2914ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே   (1)
   
2915ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே       (2)
   
2916அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே     (3)
   
2917எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே   (4)
   
2918இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே   (5)
   
2919சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே   (6)
   
2920முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின் அலால் இலேன்காண் என்னை நீ குறிக்கொள்ளே   (7)
   
2921குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே             (8)
   
2922கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே             (9)
   
2923களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே?             (10)
   
2924குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே             (11)