நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்
2925ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே             (1)
   
2926வாள் நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே             (2)
   
2927இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?             (3)
   
2928இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே             (4)
   
2929இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே?             (5)
   
2930தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே             (6)
   
2931உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே             (7)
   
2932வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே             (8)
   
2933பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே?             (9)
   
2934ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே             (10)
   
2935வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே             (11)