நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்
2947வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
      திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
      செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
      செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.             (1)
   
2948சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
      தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
      மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
      பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே             (2)
   
2949தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
      துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
      நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
      பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே             (3)
   
2950வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
      உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
      வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
      உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே?             (4)
   
2951உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
      நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
      ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
      சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே?             (5)
   
2952உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
      பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
      உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
      முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே?             (6)
   
2953முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
      உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
      செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
      விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே             (7)
   
2954மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
      உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
      பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
      ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்             (8)
   
2955எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
      செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா <
      கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
      மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?             (9)
   
2956போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்
      தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
      பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே
பரமா தண் வேங்கடம்
      மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே             (10)
   
2957கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
      கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
      எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
      பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே             (11)