நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

பன்னிரு நாமப் பாட்டு
2958கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே             (1)
   
2959நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே             (2)
   
2960மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே             (3)
   
2961கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே             (4)
   
2962விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள
் விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே             (5)
   
2963மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே             (6)
   
2964திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லைகாண் என் வாமனனே             (7)
   
2965வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே             (8)
   
2966சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே             (9)
   
2967இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே             (10)
   
2968பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே             (11)
   
2969தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே?             (12)
   
2970வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே             (13)