நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக
2993கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே             (1)
   
2994சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே             (2)
   
2995பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அது கருமமே             (3)
   
2996கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே             (4)
   
2997திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப் போவது கிறியே             (5)
   
2998கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே             (6)
   
2999நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே             (7)
   
3000வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே             (8)
   
3001வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே             (9)
   
3002சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
போது அவிழ் மலையே புகுவது பொருளே             (10)
   
3003பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே             (11)