நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்
3004முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே             (1)
   
3005கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ             (2)
   
3006பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே             (3)
   
3007மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே?             (4)
   
3008வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?             (5)
   
3009ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே?             (6)
   
3010வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?             (7)
   
3011மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே?             (8)
   
3012மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே?             (9)
   
3013மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே?             (10)
   
3014வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே             (11)