நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல் |
| 3059 | செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய் செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும் மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே (1) | |
|
| |
|
|
| 3060 | மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை சாவம் உள்ளன நீக்குவானை தடங் கடல் கிடந்தான் தன்னை தேவ தேவனை தென் இலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ (2) | |
|
| |
|
|
| 3061 | பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை மணி வண்ணனை குடக் கூத்தனை அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ (3) | |
|
| |
|
|
| 3062 | வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும் வானவர் தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே (4) | |
|
| |
|
|
| 3063 | திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றும் ஆய் கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கருங் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே (5) | |
|
| |
|
|
| 3064 | தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால் நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே (6) | |
|
| |
|
|
| 3065 | எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆர் உயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனை குடக் கூத்தனை விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை தொழுமின் தூய மனத்தர் ஆய் இறையும் நில்லா துயரங்களே (7) | |
|
| |
|
|
| 3066 | துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய் அவை அல்லன் ஆய் உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே (8) | |
|
| |
|
|
| 3067 | தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானும் ஆய் அவை அல்லன் ஆய் எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின் நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே (9) | |
|
| |
|
|
| 3068 | கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர் பட அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்றுகொல் கண்களே (10) | |
|
| |
|
|
| 3069 | கண்கள் காண்டற்கு அரியன் ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய் மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை பண் கொள் சோலை வழுதி நாடன் குருகைக்கோன் சடகோபன் சொல் பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11) |
|
|
| |
|
|