நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்
3081முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர்
கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில்
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)
   
3082நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2)
   
3083வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம்
நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே (3)
   
3084கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4)
   
3085கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5)
   
3086செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6)
   
3087ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத்
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7)
   
3088கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8)
   
3089கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)
   
3090பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10)
   
3091புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)