நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
3092சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே (1)
   
3093உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே? (2)
   
3094ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)
   
3095என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே (4)
   
3096கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5)
   
3097வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே (6)
   
3098சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)
   
3099வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)
   
3100வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே (9)
   
3101நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?  (10)
   
3102ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே  (11)