| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல் | 
					
			
			
      | | 3103 | சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம் வில்
 ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
 தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
 வன்மை உடைய அரக்கர் அசுரரை
 மாளப் படை பொருத
 நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
 நான் ஓர் குறைவு இலனே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3104 | குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன் கோலச் செந்தாமரைக்கண்
 உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
 வண்ணன் கண்ணன்
 கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
 காய்ந்த அம்மான்
 நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
 யான் ஒரு முட்டு இலனே (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3105 | முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
 கட்டியை தேனை அமுதை நன்பாலை
 கனியை கரும்பு தன்னை
 மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை
 வணங்கி அவன் திறத்துப்
 பட்ட பின்னை இறையாகிலும் யான் என்
 மனத்துப் பரிவு இலனே (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3106 | பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
 திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
 அங்கியும் போர் தொலைய
 பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
 ஆயனை பொன் சக்கரத்து
 அரியினை அச்சுதனைப் பற்றி யான்
 இறையேனும் இடர் இலனே (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3107 | இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய
 படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
 திண் தேர் கடவி
 சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
 வைதிகன் பிள்ளைகளை
 உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
 ஒன்றும் துயர் இலனே (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3108 | துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
 துயரில் மலியும் மனிசர் பிறவியில்
 தோன்றி கண் காண வந்து
 துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
 புக உய்க்கும் அம்மான்
 துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற
 யான் ஓர் துன்பம் இலனே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3109 | துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை ஆய் உலகங்களும் ஆய்
 இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்
 சுவர்க்கங்களும் ஆய்
 மன் பல் உயிர்களும் ஆகி பலபல
 மாய மயக்குக்களால்
 இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று
 ஏதும் அல்லல் இலனே (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3110 | அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
 அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்
 ஆகியும் நிற்கும் அம்மான்
 எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு
 எல்லாக் கருமங்களும் செய்
 எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி
 யான் ஓர் துக்கம் இலனே (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3111 | துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
 மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
 வேண்டும் உருவு கொண்டு
 நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
 எவையும் தன்னுள்
 ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
 ஒன்றும் தளர்வு இலனே (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3112 | தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
 அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
 அருவு ஆகி நிற்கும்
 வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
 ஐந்தை இரு சுடரை
 கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
 யான் என்றும் கேடு இலனே (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3113 | கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
 பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
 பயிற்ற வல்லார்கட்கு அவன்
 நாடும் நகரமும் நன்குடன் காண
 நலனிடை ஊர்தி பண்ணி
 வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
 தரும் ஒரு நாயகமே (11)
 | 
 |  | 
		
			|  |  |  |