நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

வெறி விலக்கு
3169தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?             (1)
   
3170திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம்
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே             (2)
   
3171இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின்
மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே             (3)
   
3172மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே             (4)
   
3173இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே             (5)
   
3174தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே             (6)
   
3175அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே             (7)
   
3176வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய்
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே             (8)
   
3177கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே             (9)
   
3178உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே             (10)
   
3179தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே             (11)