நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்
3191ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே             (1)
   
3192மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே             (2)
   
3193மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே             (3)
   
3194நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே             (4)
   
3195தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே             (5)
   
3196அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒருமூர்த்தி
குறிய மாண் உரு ஆகி கொடுங் கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே             (6)
   
3197கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே             (7)
   
3198வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே             (8)
   
3199மேகலையால் குறைவு இல்லா மெலிவு உற்ற அகல் அல்குல்
போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே             (9)
   
3200உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒருகூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே             (10)
   
3201உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே             (11)