நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்
3235பொலிக பொலிக பொலிக
      போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
      நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
      ஆடி உழிதரக் கண்டோம்      (1)
   
3236கண்டோம் கண்டோம் கண்டோம்
      கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
      பரந்து திரிகின்றனவே             (2)
   
3237திரியும் கலியுகம் நீங்கி
      தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
      பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ணன் எம்மான்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி
      எங்கும் இடம் கொண்டனவே             (3)
   
3238இடம் கொள் சமயத்தை எல்லாம்
      எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான்
      தன்னுடைப் பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
      கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
      நாடகம் செய்கின்றனவே             (4)
   
3239செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
      ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
      மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
      அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
      ஊழி பெயர்த்திடும் கொன்றே             (5)
   
3240கொன்று உயிர் உண்ணும் விசாதி
      பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் உலகில் கடிவான்
      நேமிப் பிரான் தமர் போந்தார்
 நன்று இசை பாடியும் துள்ளி
      ஆடியும் ஞாலம் பரந்தார்
 சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!
      சிந்தையைச் செந்நிறுத்தியே (6)
   
3241நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
      தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
      மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
      கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
      யாயவர்க்கே இறுமினே             (7)
   
3242இறுக்கும் இறை இறுத்து உண்ண
      எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
      அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
      பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
      மேவித் தொழுது உய்ம்மின் நீரே             (8)
   
3243மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்
      வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
      ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
      சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும்
      பகவரும் மிக்கது உலகே             (9)
   
3244மிக்க உலகுகள் தோறும்
      மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
      இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
      எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்கத் தொழ கிற்றிராகில்
      கலியுகம் ஒன்றும் இல்லையே             (10)
   
3245கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்
      அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
      மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென் நன் குருகூர்க்
      காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து
      உள்ளத்தை மாசு அறுக்குமே             (11)