நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)
3290நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும்
      இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்
      சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே             (1)
   
3291அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்
      காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு
      சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே             (2)
   
3292கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என்
      கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ்
      சிரீவரமங்கலநகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே             (3)
   
3293மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
      மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்
      சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே?      (4)
   
3294எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
      தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்
      சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே             (5)
   
3295ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
      என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
      கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே             (6)
   
3296வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
      கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்
      சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே             (7)
   
3297அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
      நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை
      வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே             (8)
   
3298புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய்
      எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி
      தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே             (9)
   
3299ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
      உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
      தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே             (10)
   
3300தெய்வ நாயகன் நாரணன்
      திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
      சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
      சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
      வானோர்க்கு ஆரா அமுதே             (11)