நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)
3312மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?             (1)
   
3313என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?             (2)
   
3314சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே?             (3)
   
3315நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே             (4)
   
3316நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே?             (5)
   
3317காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே?             (6)
   
3318பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே?             (7)
   
3319நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே?             (8)
   
3320கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே?             (9)
   
3321தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே?             (10)
   
3322நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே             (11)