நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)
3356நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே             (1)
   
3357கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே             (2)
   
3358நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே            (3)
   
3359புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?             (4)
   
3360கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே             (5)
   
3361மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே             (6)
   
3362பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே            (7)
   
3363வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே            (8)
   
3364என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே             (9)
   
3365நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே            (10)
   
3366காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே             (11)