| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்) | 
					
			
			
      | | 3378 | துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும்
 இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
 ஆசை இல்லை விடுமினோ
 தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
 தாமரைத் தடம் கண் என்றும்
 குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
 நின்று நின்று குமுறுமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3379 | குமுறும் ஓசை விழவு ஒலித் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
 அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
 ஆசை இன்றி அகற்றினீர்
 திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
 தேவ தேவபிரான் என்றே
 நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
 நெக்கு ஒசிந்து கரையுமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3380 | கரை கொள் பைம் பொழில் தண் பணைத் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
 உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு
 ஆசை இன்றி அகற்றினீர்
 திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்
 திசை ஞாலம் தாவி அளந்ததும்
 நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி
 நெடும் கண் நீர் மல்க நிற்குமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3381 | நிற்கும் நால்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்டபின்
 அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
 கண்டீர் இவள் அன்னைமீர்
 கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
 வண்ணன் கண்ண பிரான் என்றே
 ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
 உள் மகிழ்ந்து குழையுமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3382 | குழையும் வாள் முகத்து ஏழையைத் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
 இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
 பிரான் இருந்தமை காட்டினீர்
 மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
 அன்று தொட்டும் மையாந்து இவள்
 நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
 அத் திசை உற்று நோக்கியே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3383 | நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
 வாய்க்கும் தண் பொருநல் வடகரை
 வண் தொலைவில்லிமங்கலம்
 நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
 நோக்கு இலள் வைகல் நாள்தொறும்
 வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
 நாமமே இவள் அன்னைமீர்!             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3384 | அன்னைமீர் அணி மா மயில் சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து
 என்ன வார்த்தையும் கேட்குறாள்
 தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
 முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
 வண்ணன் மாயம் கொலோ? அவன்
 சின்னமும் திருநாமமும் இவள்
 வாயனகள் திருந்தவே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3385 | திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
 இருந்து வாழ் பொருநல் வடகரை
 வண் தொலைவில்லிமங்கலம்
 கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
 தொடங்கி இந் நாள்தொறும்
 இருந்து இருந்து அரவிந்தலோசன
 என்று என்றே நைந்து இரங்குமே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3386 | இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
 மரங்களும் இரங்கும் வகை
 மணிவண்ணவோ என்று கூவுமால்
 துரங்கம் வாய் பிளந்தான் உறை
 தொலைவில்லிமங்கலம் என்று தன்
 கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
 திருநாமம் கற்றதன் பின்னையே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3387 | பின்னைகொல் நில மா மகள்கொல் திருமகள்கொல் பிறந்திட்டாள்?
 என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
 என்றே நின்று கூவுமால்
 முன்னி வந்து அவன் நின்று இருந்து
 உறையும் தொலைவில்லிமங்கலம்
 சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
 திருநாமம் கேட்பது சிந்தையே.            (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3388 | சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
 தந்தை தாய் என்று அடைந்த
 வண் குருகூரவர் சடகோபன்
 முந்தை ஆயிரத்துள் இவை தொலை
 வில்லிமங்கலத்தைச் சொன்ன
 செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
 அடிமைசெய்வார் திருமாலுக்கே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |