நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்
3411பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.            (1)
   
3412மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே             (2)
   
3413ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்
ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே             (3)
   
3414தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள்
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே?            (4)
   
3415நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே            (5)
   
3416என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி
செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே             (6)
   
3417பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான்
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே?             (7)
   
3418பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள்
மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே             (8)
   
3419பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே             (9)
   
3420வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே             (10)
   
3421மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே             (11)