நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்
3422நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் சிவன் ஆய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே             (1)
   
3423மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே             (2)
   
3424ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?            (3)
   
3425தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே             (4)
   
3426விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி
யுள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ?             (5)
   
3427பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?             (6)
   
3428உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே            (7)
   
3429அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே?             (8)
   
3430ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?             (9)
   
3431குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே?             (10)
   
3432தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே             (11)