நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்)
3433உலகம் உண்ட பெருவாயா
      உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
      நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
      திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
      கூடும் ஆறு கூறாயே             (1)
   
3434கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
      கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
      வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
      மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
      அடிசேர் வண்ணம் அருளாயே             (2)
   
3435வண்ணம் மருள் கொள் அணி மேக
      வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
      அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
      அடியேற்கு ஆஆ என்னாயே             (3)
   
3436ஆஆ என்னாது உலகத்தை
      அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
      சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
      பொருந்துமாறு புணராயே            (4)
   
3437புணரா நின்ற மரம் ஏழ் அன்று
      எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
      நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
      சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
      சேர்வது அடியேன் எந்நாளே?             (5)
   
3438எந்நாளே நாம் மண் அளந்த
      இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
      ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
      செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
      அடிக்கண் அடியேன் மேவுவதே?             (6)
   
3439அடியேன் மேவி அமர்கின்ற
      அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
      கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
      திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
      காண நோலாது ஆற்றேனே             (7)
   
3440நோலாது ஆற்றேன் உன பாதம்
      காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
      நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
      விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
      வந்தாய் போலே வாராயே             (8)
   
3441வந்தாய் போலே வாராதாய்
      வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
      நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
      பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
      அகலகில்லேன் இறையுமே             (9)
   
3442அகலகில்லேன் இறையும் என்று
      அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
      உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
      அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.             (10)
   
3443அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
      வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
      பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
      திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
      பெரிய வானுள் நிலாவுவரே.             (11)