நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்
3444உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
      உன் பாதபங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண் இலாப் பெறு மாயனே இமையோர்கள்
      ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே             (1)
   
3445என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து
      இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே
      கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே             (2)
   
3446வேதியாநிற்கும் ஐவரால் வினையேனை
      மோதுவித்து உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து என் பெறுதி? அந்தோ!
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு
      உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே             (3)
   
3447சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
      காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி
      ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே             (4)
   
3448தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத்
      திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி
      அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ             (5)
   
3449விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
      செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய்
      பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே             (6)
   
3450ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
      ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல்
      அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே             (7)
   
3451இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
      மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
      கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே             (8)
   
3452குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில்
      வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள்கண்டாய்
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன
      செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே             (9)
   
3453என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி
      உன் இணைத் தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை
      வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ             (10)
   
3454கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து
      அளித்து கெடுக்கும் அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
      சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே             (11)