நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்
3477ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே             (1)
   
3478ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே             (2)
   
3479நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே             (3)
   
3480நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே             (4)
   
3481ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே             (5)
   
3482போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே             (6)
   
3483மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே             (7)
   
3484நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே             (8)
   
3485அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே             (9)
   
3486மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே             (10)
   
3487குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே            (11)