நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்
3510ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன்
சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே?             (1)
   
3511ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்?
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே             (2)
   
3512வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே            (3)
   
3513இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன்
தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே             (4)
   
3514என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே             (5)
   
3515உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்
பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே?
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே             (6)
   
3516காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே            (7)
   
3517கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே?             (8)
   
3518கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே             (9)
   
3519நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே?            (10)
   
3520கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே             (11)