நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்
3521மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய்
தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய்
நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே             (1)
   
3522அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறும் ஆய் செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்
பொங்கு பொழி மழை ஆய் புகழ் ஆய் பழி ஆய் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே             (2)
   
3523சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே             (3)
   
3524கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வெள்ளத் தடம் கடலுள் விட நாகு அணைமேல் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே             (4)
   
3525பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே             (5)
   
3526மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய் அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் வினை ஆய் பயன் ஆய் பின்னும் நீ
துயக்கு ஆய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே             (6)
   
3527துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்கள் ஆய் மதன் ஆகி உகவைகள் ஆய்
துயரம் செய் காமங்கள் ஆய் துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே             (7)
   
3528என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே             (8)
   
3529என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே             (9)
   
3530இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே            (10)
   
3531ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே             (11)