நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
3532என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?             (1)
   
3533என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே?             (2)
   
3534ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ?             (3)
   
3535அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?             (4)
   
3536சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே             (5)
   
3537இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே             (6)
   
3538வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ?             (7)
   
3539ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே?             (8)
   
3540திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே?             (9)
   
3541உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே             (10)
   
3542இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே             (11)