நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தௌதல்
3554தேவிமார் ஆவார் திருமகள் பூமி
      ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
      வேண்டு வேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
      கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
      அப்பனே காணுமாறு அருளாய்             (1)
   
3555காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
      கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
      பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா
      தொண்டனேன் கற்பகக் கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ்
      பெரு நிலம் எடுத்த பேராளா             (2)
   
3556எடுத்த பேராளன் நந்தகோபன் தன்
      இன் உயிர்ச் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம் களிறே
      அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக்
      கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய்
      எங்ஙனம் தேறுவர் உமரே?             (3)
   
3557உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
      ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
      அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
      அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
      என்னுடை ஆர் உயிரேயோ             (4)
   
3558ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
      படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு
      உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
      போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்!
      உன்னை நான் எங்கு வந்து உறுகோ?             (5)
   
3559எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
      ஏழ் உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே
      அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
      அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே
      வான் புலன் இறந்ததும் நீயே             (6)
   
3560இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
      நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று
      அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே
      கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
      பின்னை தோள் மணந்த பேர் ஆயா             (7)
   
3561மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
      வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
      கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
      பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும்
      செய்கையும் யானும் நீ தானே            (8)
   
3562யானும் நீ தானே ஆவதோ மெய்யே
      அரு நரகு அவையும் நீ ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை
      நரகமே எய்தில் என்? எனினும்
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
      அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!
      அருளு நின் தாள்களை எனக்கே            (9)
   
3563தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
      தந்த பேர் உதவிக் கைம்மாறாத்
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை
      அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்
      துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
      தமியனேன் பெரிய அப்பனே             (10)
   
3564பெரிய அப்பனை பிரமன் அப்பனை
      உருத்திரன் அப்பனை முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை
      உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன்
      பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால்
      உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)