நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
3565நங்கள் வரிவளை ஆயங்காளோ
      நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
      நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
      தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
      வேங்கடவாணனை வேண்டிச் சென்றே             (1)
   
3566வேண்டிச் சென்று ஒன்று பெறுகிற்பாரில்
      என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ
      காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
      விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
      எத்தனை காலம் இளைக்கின்றேனே             (2)
   
3567காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
      நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
      நல் நுதலீர் இனி நாணித் தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த
      நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளையொடும் மாமை கொள்வான்
      எத்தனை காலமும் கூடச் சென்றே?             (3)
   
3568கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்?
      கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல்
      பல்வளையார்முன் பரிசு அழிந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
      வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல் போர்
      ஆழிவலவனை ஆதரித்தே             (4)
   
3569ஆழிவலவனை ஆதரிப்பும்
      ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள் நம் உடையமேதான்?
      சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழிதோறு ஊழி ஒருவனாக
      நன்கு உணர்வார்க்கும் உணரலாகாச்
சூழல் உடைய சுடர் கொள் ஆதித்
      தொல்லை அம் சோதி நினைக்குங்காலே?            (5)
   
3570தொல்லை அம் சோதி நினைக்குங்கால் என்
      சொல் அளவு அன்று இமையோர் தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும்
      அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
      ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்!
வல்லி வள வயல் சூழ் குடந்தை
      மா மலர்க்கண் வளர்கின்ற மாலே             (6)
   
3571மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன்
      கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
      ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள்
      என்னுடைத் தோழியர்காள் என் செய்கேன்?
காலம் பல சென்றும் காண்பது ஆணை
      உங்களோடு எங்கள் இடை இல்லையே             (7)
   
3572இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
      பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
      ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
      அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை
      அன்றி அவன் அவை காண்கொடானே            (8)
   
3573காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை
      கைசெய் அப்பாலது ஓர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
      மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
      தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
      என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்?             (9)
   
3574என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்
      யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி
      நேமியும் சங்கும் இருகைக் கொண்டு
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு
      பால் மதி ஏந்தி ஓர் கோல நீல
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான்
      நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே             (10)
   
3575பாதம் அடைவதன் பாசத்தாலே
      மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல்
      வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும்
      அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.             (11)