நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)
3587வார் கடா அருவி யானை மா மலையின்
      மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின்
      மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல்
போர் கடா அரசர் புறக்கிட மாடம்
      மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே             (1)
   
3588எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
      இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
      பொருந்து மூவுருவன் எம் அருவன்
செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ்
      திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
      யாவர் மற்று என் அமர் துணையே?             (2)
   
3589என் அமர் பெருமான் இமையவர் பெருமான்
      இரு நிலம் இடந்த எம் பெருமான்
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள
      என்னை ஆள்கின்ற எம் பெருமான்
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண்
      நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே            (3)
   
3590பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும்
      நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
      கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ்
      திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான்
      அடிஇணை அல்லது ஓர் அரணே            (4)
   
3591அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை
      அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது
      ஆதலால் அவன் உறைகின்ற
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த
      நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே             (5)
   
3592எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை
      இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை
      தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும்
      அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே            (6)
   
3593திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
      கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
      செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல உந்தியும் செய்ய
      கமலை மார்பும் செய்ய உடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
      திகழ என் சிந்தையுளானே             (7)
   
3594திகழ என் சிந்தையுள் இருந்தானை
      செழு நிலத்தேவர் நான்மறையோர்
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாற்றங் கரையானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
      அசுரர் வன் கையர் வெம் கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்
      படைப்பொடு கெடுப்புக் காப்பவனே            (8)
   
3595படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
      பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே
      புகழ்வு இல்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார்
      கூரிய விச்சையோடு ஒழுக்கம்
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே             (9)
   
3596அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி
      அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாற்றங் கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்
      தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
      நான்முகனை அமர்ந்தேனே             (10)
   
3597தேனை நன் பாலை கன்னலை அமுதை
      திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
      மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
      சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
      பிறவி மா மாயக் கூத்தினையே             (11)