நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்) |
| 3642 | கரு மாணிக்க மலைமேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப்புலியூர் அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர்! இதற்கு என் செய்கேனோ? (1) | |
|
| |
|
|
| 3643 | அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி மேருவின் மீது உலவும் துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான் புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே (2) | |
|
| |
|
|
| 3644 | புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே (3) | |
|
| |
|
|
| 3645 | ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான் பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே (4) | |
|
| |
|
|
| 3646 | புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்கப்புக்கால் சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் முனைவன் மூவுலகு ஆளி அப்பன் திரு அருள் மூழ்கினளே. (5) | |
|
| |
|
|
| 3647 | திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ண பிரான் திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை யாளம் திருந்த உள திரு அருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் திரு அருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே (6) | |
|
| |
|
|
| 3648 | மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கு இளம் தாள் கமுகின் மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து புல் இலைத் தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர் மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே (7) | |
|
| |
|
|
| 3649 | மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய்த் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் பட அரவு அணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே (8) | |
|
| |
|
|
| 3650 | பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ண பிரான் விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம் தீவிகை நின்று அலரும் புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப் புகழ் அன்றி மற்றே (9) | |
|
| |
|
|
| 3651 | அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே? (10) | |
|
| |
|
|
| 3652 | நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே (11) | |
|
| |
|
|