நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)
3664கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே             (1)
   
3665துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலைப்
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே            (2)
   
3666பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே             (3)
   
3667அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே             (4)
   
3668சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே             (5)
   
3669இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே            (6)
   
3670மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே             (7)
   
3671வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே             (8)
   
3672யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடிக்கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே             (9)
   
3673கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே             (10)
   
3674ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே             (11)