நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)
3675பண்டை நாளாலே நின் திரு அருளும்
      பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
      குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன்
      தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
      திருப்புளிங்குடிக் கிடந்தானே             (1)
   
3676குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த
      அடிமைக் குற்றேவல்செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
      அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
      பங்கயமே தலைக்கு அணியாய்
கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை
      திருப்புளிங்குடிக் கிடந்தானே            (2)
   
3677கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
      கிடத்தி உன் திருஉடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
      வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன்
      தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்
      திருப்புளிங்குடிக் கிடந்தானே             (3)
   
3678புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
      இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே
      என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
      நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
      சிவப்ப நீ காண வாராயே             (4)
   
3679பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண
      வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
      தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்
      தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
      காய் சினப் பறவை ஊர்ந்தானே             (5)
   
3680காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
      மீமிசைக் கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு
      அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே
      கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு
      ஏந்தி எம் இடர் கடிவானே             (6)
   
3681எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே
      இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலருந் தாமரைப் பழனத்
      தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து
      நாம் களித்து உளம் நலம் கூர
இம் மட உலகர் காண நீ ஒருநாள்
      இருந்திடாய் எங்கள் கண்முகப்பே             (7)
   
3682எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
      இணை அடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால்
      தலைத்தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்
      திரு வைகுந்தத்துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள்
      இருந்திடாய் வீற்று இடம் கொண்டே             (8)
   
3683வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து
      இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர
      புது மலர் ஆகத்தைப் பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
      செழும் பனைத் திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
      கொடுவினைப் படைகள் வல்லானே             (9)
   
3684கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
      இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே
      கலி வயல் திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை
      நிலமகள் பிடிக்கும் மெல் அடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
      கூவுதல் வருதல் செய்யாயே             (10)
   
3685கூவுதல் வருதல் செய்திடாய் என்று
      குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
      வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
      இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
      அடி இணை உள்ளத்து ஓர்வாரே             (11)