நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்
3686ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாரயணன் நங்கள் பிரான் அவனே             (1)
   
3687அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே             (2)
   
3688அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே             (3)
   
3689மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே             (4)
   
3690மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்!
புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே             (5)
   
3691அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே             (6)
   
3692ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே             (7)
   
3693இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே             (8)
   
3694தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே             (9)
   
3695தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே?             (10)
   
3696சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே