நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்
3708இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்
என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?             (1)
   
3709இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்?
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே             (2)
   
3710அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே?
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே?             (3)
   
3711கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேல் கிளை கொள்ளேல்மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே             (4)
   
3712அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்             (5)
   
3713நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்             (6)
   
3714கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன்போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்
காட்டேல்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே             (7)
   
3715உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழஞ் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! பண்பு உடையீரே             (8)
   
3716பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்            (9)
   
3717எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள்காள் பயின்று என் இனி?
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே             (10)
   
3718இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே             (11)