நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்
3752மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ
      வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
      செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
      ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
      புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ             (1)
   
3753புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
      புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ
      பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
      அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
      இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?             (2)
   
3754இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?
      இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து
      துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
      தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
      பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ             (3)
   
3755பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
      வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ
      மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
      துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ
      யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ             (4)
   
3756யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ
      ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ
      அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாரும்
      எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ
யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்?
      அவனுடை அருள்பெறும் போது அரிதே             (5)
   
3757அவனுடை அருள்பெறும் போது அரிதால்
      அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
      அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை
      சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ?
      ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்             (6)
   
3758ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
      ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
      கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
      பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
      புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ             (7)
   
3759புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
      பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
      கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
      வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
      ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்             (8)
   
3760ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
      அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி
      தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
      பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம
      மாலையும் வந்தது மாயன் வாரான்             (9)
   
3761மாலையும் வந்தது மாயன் வாரான்
      மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ
      கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள்
      மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ
      என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?            (10)
   
3762அவனைவிட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
      அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
      அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
      ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
      அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே             (11)