நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்)
3774தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்க்
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே             (1)
   
3775இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே             (2)
   
3776அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே             (3)
   
3777இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே             (4)
   
3778தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே             (5)
   
3779கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே             (6)
   
3780மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச்
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே             (7)
   
3781துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே             (8)
   
3782மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே             (9)
   
3783நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்             (10)
   
3784ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே             (11)