நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்
3796வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ
      மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
      கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
      ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ
      தகவிலை தகவிலையே நீ கண்ணா             (1)
   
3797தகவிலை தகவிலையே நீ கண்ணா
      தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்கச்
      சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு
      ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்
      வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே             (2)
   
3798வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
      வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
      அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
      பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப்
      பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே             (3)
   
3799தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
      துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
      துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
      பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
      பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்             (4)
   
3800பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
      பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ
      பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ
மணி மிகு மார்பினில் முல்லைப்போது என்
      வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ!
      அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்             (5)
   
3801அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
      ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
      பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
      மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
      வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே             (6)
   
3802வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
      வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோர
      துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல
      வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
      அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?            (7)
   
3803அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று
      ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து
      கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
      கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ
      உகக்கும் நல்லவரொடும் உழிதராயே             (8)
   
3804உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்
      திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
      எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
      நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
      அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ            (9)
   
3805அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
      அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்
      தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று
      ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
      செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே             (10)
   
3806செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
      திருவடி திருவடிமேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர்
      வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை
      அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
      உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே             (11)