நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்
3818கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே             (1)
   
3819நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே             (2)
   
3820தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே ஆள்வானே             (3)
   
3821ஆள்வான் ஆழி நீர்க்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே                   (4)
   
3822நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே             (5)
   
3823மேயான் வேங்கடம்
காயாமலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே             (6)
   
3824மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே             (7)
   
3825சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே             (8)
   
3826அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே             (9)
   
3827வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே             (10)
   
3828நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள்பேறே             (11)