நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) |
| 3829 | அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே (1) | |
|
| |
|
|
| 3830 | வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம் பெருமானைப் பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே (2) | |
|
| |
|
|
| 3831 | நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே (3) | |
|
| |
|
|
| 3832 | என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே (4) | |
|
| |
|
|
| 3833 | வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே! தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே (5) | |
|
| |
|
|
| 3834 | தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான் நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே (6) | |
|
| |
|
|
| 3835 | குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல் விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே (7) | |
|
| |
|
|
| 3836 | மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே? (8) | |
|
| |
|
|
| 3837 | திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே (9) | |
|
| |
|
|
| 3838 | பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான் அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே (10) | |
|
| |
|
|
| 3839 | காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம் பெருமானை வளங் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே (11) | |
|
| |
|
|