நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)
3840செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே             (1)
   
3841தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே            (2)
   
3842என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?            (3)
   
3843என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே?             (4)
   
3844நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே             (5)
   
3845திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே             (6)
   
3846அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே             (7)
   
3847திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே             (8)
   
3848ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்
ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே             (9)
   
3849மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே.            (10)
   
3850மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய்ப் புக்கு தானே தானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே.             (11)