நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல்
3862சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின:
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே             (1)
   
3863நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே             (2)
   
3864தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே             (3)
   
3865எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே             (4)
   
3866மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே             (5)
   
3867வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)
   
3868மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே             (7)
   
3869குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே             (8)
   
3870வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே             (9)
   
3871விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே             (10)
   
3872வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே             (11)