நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

தனியன்கள்
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ-
மாயோனை வாள் வலியால் மந்திரம்கொள் மங்கையர்-கோன்
தூயோன் சுடர் மான வேல்
   
மூளும் பழவினை எல்லாம் அகல முனிந்தருளி
ஆளும் குறையல் அருள்-மாரி அம் பொன் மதிள் அரங்கர்
தாள் அன்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
வாளும் பலகையுமே அடியேன் நெஞ்சம் மன்னியதே
   
முன்னை வினை அகல மூங்கில்குடி அமுதன்
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் என்னுடைய
சென்னிக்கு அணி ஆகச் சேர்த்தினேன்-தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்?
   
முள்ளிச் செழு மலரோ தாரான்-முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே வள்ளல்
திருவாளன் சீர்க் கலியன் கார்க் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
   
முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே சந்த
முருகு ஊரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு
   
பொன்-உலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்
நல் நுதலீர் நம்பி நறையூரர் மன் உலகில்
என் நிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்
மன்னும் மடல் ஊர்வன் வந்து
   
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏர் ஆர் சிவன் பிறந்தான் என்னும் சொல் சீர் ஆர்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய் பூ
மழிசைப்பரன் அடியே வாழ்த்து
   
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணினர்பால்
சயம் தரு கீர்த்தி இராமாநுச முனி தாள்-இணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை-அந்தாதி ஓத இசை நெஞ்சமே
   
சொல்லின் தொகை கொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு-அறுசமயம்
வெல்லும் பரம இராமாநுச!-இது என் விண்ணப்பமே
   
சீர் ஆர் திரு எழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால்
ஆரா - அமுதன் குடந்தைப் பிரான் - தன் அடி- இணைக்கீழ்
ஏர் ஆர் மறைப்பொருள் எல்லாம் எடுத்து இவ் உலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள்-மாரி பாதம் துணை நமக்கே
   
சீர் ஆரும் மாடத் திருக்கோவலூர் - அதனுள்
கார் ஆர் கரு முகிலைக் காணப் புக்கு ஓராத்
திருக்கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து
   
கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்து உதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போர் ஏறு வையத்து
அடியவர்கள் வாழ அருந் தமிழ் அந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து
   
காசினியோர்-தாம் வாழ கலியுகத்தே வந்து உதித்து
ஆசிரியப்பா-அதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ் வகுளத் தாரானை-
மாசு அடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே
   
கரு விருத்தக் குழி நீத்தபின் காமக் கடுங் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுறுவீர் உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர்கோன் உரைத்த
திருவிருத்தத்து ஓர் அடி கற்று இரீர்-திருநாட்டகத்தே
   
என் பிறவி தீர இறைஞ்சினேன்- இன் அமுதா
அன்பே தகளி அளித்தானை நன் புகழ் சேர்
சீதத்து ஆர் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன் அம் கழல்
   
இனி என் குறை நமக்கு - எம்பெருமானார் திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டுச் சாவித்திரி என்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை-அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்தமுது ஆகிய புண்ணியனே?