33
|
கொய்தவாண்
முடிதி ரண்ட குப்பைக ளேறி வெய்யில்
செய்தவாண் முடியைச் சூடிச் சிறந்தவா சனத்தி லோங்கிப்
பெய்தவா னொளியோ டாய்ந்த பெருந்தயை பிலிற்றுஞ்
செங்கோ
லெய்தவா னிறையோ னாண்மை யெய்தியே யரச னானான். |
|
கொய்த வாள்
முடி திரண்ட குப்பைகள் ஏறி, வெய்யில்
செய்த வாள் முடியைச் சூடி, சிறந்த ஆசனத்தில் ஓங்கி,
பெய்தவான் ஒளியோடு ஆய்ந்த பெருந் தயை பிலிற்றும்
செங்கோல்
எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே, அரசன்
ஆனான்.
|
வானுலகம் பெய்து
தந்த ஒளியோடு ஆராய்ந்து கண்ட பேரன்பைப்
பொழியும் செங்கோல் அடையுமாறு வானுலக ஆண்டவன் தந்த
வல்லமையைத் தாவிதன் அடைந்து, தன் வாள் கொய்த பகைவரின்
தலைகள் திரண்ட குவியலைக் காலால் மிதித்து ஏறி, ஒளியைச் செய்த
வாளை இடையிலும் முடியைத் தலையிலும் அணிந்து, சிறந்த
அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான்.
34
|
நூனகத்
துளங்கிக் கேள்வி நுண்ணறி வாள ரொவ்வா
வானகத் தொதுங்கி வாழும் வரும்பொருள் காட்டுங்
காட்சி
கானகத் தொதுங்கி வைகுங் கடித்தவத் தோடு மின்ன
கோனகத் திலங்கி யங்கண் குடியென வதிந்த தாமால். |
|
நூல்
நகத் துளங்கி, கேள்வி நுண் அறிவாளர் ஒவ்வா,
வானகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி,
கானகத்து ஒதுங்கி வைகும் கடித் தவத்தோடும் இன்ன
கோன் அகத்து இலங்கி, அங்கண் குடி என வதிந்த தாம் ஆல். |
நூலறிவை இகழுமாறு
விளங்கி, கேள்வியால் அடைந்த நுண்ணறிவு
படைத்தவரும் ஒவ்வாத வகையில், வானுலகத்திற்கே உரியதாய் அமைந்த
எதிர்காலப் பொருளை முன்னரே காட்டும் தெய்வக் காட்சி, காட்டில்
ஒதுங்கித் தங்கும் மிக்க தவத்தோடும் சேர்ந்து இந்த மன்னனிடத்து
விளங்கிற்று. இவை அவனுக்குக் குடிகள்போல அவன்பால் தங்கியிருந்தன.
|