பக்கம் எண் :

முதற் காண்டம்27

'சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு
குறித்தமையான்' (827) என்ற குறள் பாக்கள், 'பதுங்குவதெல்லாம்
பாய்வதற்கே' என்ற பழஞ்சொல் இங்கு நினைக்கத் தக்கன.
     
             22
வேர்ப்பெ ழக்கயல் விழியர் கைவளை
யார்ப்பெ ழக்கடை தயிரி லாயநெய்
கூர்ப்பெ ழத்துயர் குறுக மேலற
மேர்ப்பெ ழச்செய்வோ ரியல்பு மானுமே
 
வேர்ப்பு எழ, கயல் விழியர் கைவளை
ஆர்ப்பு எழக் கடை தயிரில் ஆய நெய்,
கூர்ப்பு எழத் துயர் குறுக, மேல் அறம்
ஏர்ப்பு எழச் செய்வோர் இயல்பு மானுமே.

     கயல் மீன் போன்ற கண்களை உடைய இடைச்சியர் தம் உடம்பில்
வேர்வை எழவும், கையில் அணிந்த வளையல்களின் ஆரவாரம் எழுமாறும்
வருந்திக் கடைந்த தயிரினின்று வெண்ணெய் மேலெழுந்து வரும். இது,
திரண்டு எழுந்த துன்பம் தம்மை அணுகிய காலத்தும் விடாது அறமே
மேலோங்கி வரச் செய்யும் மேலோரின் இயல்பை ஒத்திருக்கும்.

     ஒப்பிடுக : கம்ப இராமாயணம், நாட்டுப் படலம் 28
    
              23
கழையி றால்பனை கனிக டேங்கல
ருழையி றாவிய தேற லுண்டபின்
மழையி றாவிய மதுவி னூங்கினி
திழையி றாவழ கிளம்புள் பாடுமால்
 
கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர்
உழையில் தாவிய தேறல் உண்ட பின்,
மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது
இழை இறா அழகு இளம் புள் பாடும் ஆல்.

     கரும்பு, தேனடை, பனை, பழங்கள், தென்னை, மலர் -
இவற்றினிடமாய் எழுந்து வந்த மதுவை, இணை பிரியாத அழகிய இளம்
பறவைகள் உண்ட பின், மழைபோல் பெருகிய அம்மதுவைக் காட்டிலும்
இனிதாகப் பாடும். தேங்கு - தெங்கு என்பதன் நீட்டல் விகாரம். 'ஆல்'
அசைநிலை.